சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. முப்பெரும் விழாவில் பெரியார் விருது மீனாட்சிசுந்தரம் என்பவருக்கும், அண்ணா விருது ராமசாமி என்பவருக்கும், கலைஞர் விருது உபயதுல்லா என்பவருக்கும், பாவேந்தர் விருது தமிழரசிக்கும், பேராசிரியர் விருது ராஜகோபாலுக்கும் வழங்கப்பட்டது. விருது வாங்கிய அனைவரையும் திமுக தலைவர் ஸ்டாலின் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்தும், கேடயம் வழங்கியும் கௌரவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "கடந்த 9ஆம் தேதி இதே அரங்கில் இந்தியாவே பாராட்டக்கூடிய வகையில் நம் பொதுக்குழுவை கூட்டி காட்டியுள்ளோம்.
கரோனாவைவிட கோமா நிலையில் அதிமுக ஆட்சி உள்ளது. இன்னும் 7 மாத்தில் திமுக தான் ஆட்சி, இது நாடே சொல்கிறது.
நீட்டுக்கு எதிராக எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பினோம். என்னாயிற்று நீட் நடைபெற்றுவிட்டது.
நீர் தேர்வை தடுக்கமுடியவில்லை, இந்தி திணிப்பை தடுக்க முடியவில்லை, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை எதிர்க்க முடியவில்லை, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க முடியாமல் ஆட்சியில் அமர்ந்துள்ளார்கள். மத்திய அரசுக்கு கூனிக்குறுகி இருக்கிறார்கள். அடிமை ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர்” எனத் தெரிவித்தார்.