சென்னை: கடந்த ஜனவரி 25ஆம் தேதி புகார் பெட்டிகள் மூலம் புகார்கள் பெறும் முன்னெடுப்பை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் நிகழ்ச்சியை நடத்தி, மக்களை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார். 185 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். மக்களிடம் நேரடியாக எட்டு லட்சத்து 57 ஆயிரத்து 874 மனுக்களும், இணையதளம் மூலம் ஒன்பது லட்சத்து 25 ஆயிரத்து 532 மனுக்களும் பெறப்பட்டுள்ளது என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியின் நிறைவு நாள் நேற்று (மார்ச் 14) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த ஸ்டாலின், ”மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சி அமைத்த 100 நாட்களில் நிறைவேற்றப்படும். திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது, அதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. சாகப் போகிற நேரத்தில் சங்கரா, சங்கரா என்று சொல்வது போல, ஆளும் கட்சி தோல்வி நேரத்தில் புலம்பி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி தொகுதியில் தான் அதிக கோரிக்கை மனுக்கள் வந்ததுள்ளன" என்றார்.
இதையும் படிங்க : வெடிக்கும் உட்கட்சி பூசல் : என்ன நடக்கிறது காங்கிரஸில்?