சென்னை: திராவிடம் என்பது காலாவதியான சித்தாந்தம் என்றும் காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி என்றும், திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது என்றும் ஆங்கில ஊடகத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.
இதற்கு, திமுக மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநர் பதவி விலக வேண்டும் என்றும் ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என்றும் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இந்தநிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் மே 7 சென்னை பல்லாவரத்தில் நிகழ்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவியின் கருத்திற்கு பதிலளித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஆளுநர்: திராவிடம் என்பது காலாவதியான சித்தாந்தம்
முதலமைச்சர்: 'திராவிடம்' என்றால் காலாவதியான கொள்கை என்று ஆளுநர் சொல்லி இருக்கிறார். அவருக்குச் சொல்வேன். திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல. சனாதனத்தை காலாவதி ஆக்கியது திராவிடம். வர்ணாசிரமத்தை காலாவதி ஆக்கியது திராவிடம். மனுநீதியை காலாவதி ஆக்குவது திராவிடம். சாதியின் பேரால் இழிவு செய்வதை காலாவதி ஆக்குவது திராவிடம். பெண் என்பதால் புறக்கணிப்பதை காலாவதி ஆக்குவது திராவிடம்.
இன்னும் அழுத்தம் திருத்தமாகச் சொல்றேன். ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும்தான் உண்டு. எத்தகைய அந்நியப் படையெடுப்புகளாக இருந்தாலும், ஆரியப் படையெடுப்புகளாக இருந்தாலும், அதை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம். அதனால்தான் ஆளுநர் அதைப் பார்த்து பயப்படுறார். ஆளுநரே பயப்படத் தேவையில்லை.
ஆளுநர்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது
முதலமைச்சர்: தமிழ்நாடு எந்தக் கலவரமும் இல்லாமல் இருக்கிறது. அமைதிப் பூங்காவாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான புதிய தொழில்கள் வருகிறது. நாம் இனி பொழப்பு நடத்த முடியாதே என்று பொறாமையிலும் வன்மத்தோடும் அவர்கள் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகள் பேசுவதைப் பற்றி நான் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அவர்கள் அப்படித்தான் பேசியாக வேண்டும்.
ஆனால் அரசு நிர்வாகத்தின் அங்கமாக இருக்கின்ற ஆளுநர் எதற்காக எதிரிக்கட்சித் தலைவரைப் போல செயல்பட வேண்டும்?, எந்த நோக்கத்துக்காக அவர் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்? மாநிலத்தில் நிலவும் அமைதியைக் குலைக்க வந்திருக்கிறாரா? தமிழ்நாட்டின் சமூகச் சூழலை ஏதாவது பேசி குழப்புவதற்காக அவரை அனுப்பி வைத்திருக்கிறார்களா? என்பதுதான் மக்களின் சந்தேகமாவும், கருத்தாகவும் இருக்கிறது.
ஆளுநர்: எனக்கும் முதலமைச்சருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது
முதலமைச்சர்: முதலமைச்சர் நல்ல மனிதர் என்றும், என்னிடம் அன்பாக நடந்து கொள்கிறார் என்றும், நானும் அவரிடம் அன்பாக நடந்து கொள்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார். அதற்காக ஆளுநருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அதே நேரத்தில், நட்பையும் கொள்கையையும் குழப்பிக்கொள்ள மாட்டேன். தனிப்பட்ட நட்புக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன். அதில், என்றும் உறுதியாக இருப்பான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
ஆளுநர்: சட்டப்பேரவையில் உண்மையை கூறமுடியவில்லை, அதனால் வெளியேறினேன்
முதலமைச்சர்: கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி சட்டமன்றத்துக்கு உரையாற்ற வந்த ஆளுநர், நாம் தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமல், அவராகச் சில செய்திகளைச் சேர்த்து வாசித்தார். அவருக்கு அவை நடவடிக்கைகள் பற்றியும், மரபைப் பற்றியும் தெரியவில்லை. அப்படி அவர் நடந்து கொண்டது அவையின் உரிமையை மீறிய செயல் என்பதால்தான், நாம் தயாரித்து அனுப்பிய உரையே அவைக் குறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினோம். அவையின் மாண்பைக் காப்பதற்கு இதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. நாட்டுப் பண்ணுக்குக் கூட காத்திருக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.
ஆளுநர்: தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இல்லை
முதலமைச்சர்: தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இல்லை என்று ஆளுநர் சொல்லி இருக்கிறார். மிஸ்டர் ஆர்.என்.ரவி அவர்களே, நான் உங்களைப் பார்த்து கேட்கிறேன். பா.ஜ.க. ஆளுகின்ற மணிப்பூர் மாநிலம் இன்று பற்றி எரிகிறதே, அது போல தமிழ்நாடு பற்றி எரிகிறதா? என்ன பேசுகிறார் ஆளுநர்? சில நாட்களுக்கு முன்னால் கர்நாடக மாநிலத்தில் கலவரம் நடந்ததே? அது பா.ஜ.க. ஆளும் மாநிலம்தானே? அதுபோல இங்கு நடந்ததா?
கள்ளக்குறிச்சி பள்ளிக்கூட வன்முறை சம்பவம்: கள்ளக்குறிச்சி பள்ளிக்கூட வன்முறை சம்பவத்தில் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்து துப்பாக்கிச் சூடு இல்லாமல், சில மணி நேரத்தில் வன்முறையை கட்டுப்படுத்தியது நம்முடைய தமிழ்நாடு காவல்துறை. அன்றைய தினம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு யாராவது மரணம் அடையும் சூழல் ஏற்பட்டு இருந்தால் அதையும் குறையாக ஆளுநர் சொல்லியிருப்பார். ஆனால் அதுபோன்ற ஒரு சூழல் உருவாகாமல் தடுத்தது நம்முடைய அரசு.
தர்மபுரம் ஆதினத்துக்கு சென்றபோது ஆளுநர் தாக்கப்பட்ட விவகாரம்: கடந்த ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி தர்மபுரம் ஆதினத்துக்கு தான் போனபோது தனது வாகனம் வழிமறித்து தாக்கப்பட்டதாக ஆளுநர் அபாண்டமாக பொய் சொல்கிறார். பச்சைப் பொய், அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்று சொல்வார்களே, அவரது வாகனம் சென்ற பிறகுதான் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்கள் கையில் இருந்த கொடிகளை வீசியது வீடியோவில் பதிவாகி இருக்கிறது. ஆளுநரை ஆர்ப்பாட்டக்காரர்கள் பார்க்க முடியாத வகையில் போலீஸ் வாகனங்களுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டார்கள் என்பதும் வீடியோவில் தெளிவாக பதிவாகியிருக்கிறது. தனது வாகனம் வழிமறிக்கப்பட்டதாக அவர் சொல்வது பச்சைப் பொய்.
ஆளுநர்: இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழிகளின் புத்தகங்களையும் வாங்க வேண்டும்
முதலமைச்சர்: மதுரையில் அமையும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தமிழ், ஆங்கில நூல்கள்தான் வாங்குகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழிகளின் புத்தகங்களையும் வாங்க வேண்டுமாம்? குஜராத் மாநில நூலகத்தில் தமிழ் புத்தகங்களை வைப்பார்களா? நாகாலாந்து ஆளுநராக இருந்தாரே அங்கு உள்ள நூலகத்தில் எல்லாம் எல்லா மொழிப் புத்தகங்களையும் வைக்கச் சொல்லி சட்டம் போட்டாரா? என்ன பேசுகிறார் ஆளுநர்?
ஆளுநர்: அட்சயபாத்திரா திட்டத்தை எதற்காக ஏற்றுக் கொள்ளவில்லை
முதலமைச்சர்: தமிழ்நாடு அரசே, காலைச் சிற்றுண்டித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். பிறகு எதற்காக தனியார் நிறுவனத்தை ஊக்குவிக்க வேண்டும்? இவர் எதற்காக தனியார் நிறுவனத்துக்கு ஊதுகுழலாக மாறுகிறார்? அதற்கு என்ன அவசியம் வந்தது?
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு இழுத்தடிப்பு: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கையெழுத்துப் போடாமல் இழுத்தடித்தவர் இந்த ஆளுநர். யாரோ சிலரின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார் என்ற சந்தேகம்தான் இதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மனதில் வலுப்படுகிறது. ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு ஆட்சி நடத்தப் பார்க்கிறார் ஆளுநர்.
ஆளுநர் செயல்பாடுகளுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல: ஆளுநர் மூலமாகவோ, வேறு எதன் மூலமாகவோ எங்களை அச்சுறுத்த நினைத்தால் அதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள். மொழிப்போரை பார்த்தவர்கள். மிசாவை பார்த்தவர்கள். தடாவை பார்த்தவர்கள். பொடாவை பார்த்தவர்கள். இதையெல்லாம் பார்த்து நாங்கள் மிரள மாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.