கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலத்திலிருந்து தமிழ்நாட்டில் வசித்து வேலை பார்த்து வந்த கூலித்தொழிலாளிகள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு கூலித்தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறது.
அதேபோன்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாம்பரத்தில் தங்கியுள்ள 1,500 வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் ஆகியற்றை வழங்கினார். மேலும், வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் தங்கியுள்ள 500க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ‘குருநானக் கல்லூரி டிர்ஸ்ட்’ மூலமாக வழங்கினார்.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "வீடு, வாசல் உறவுகளை துறந்து தங்களுடைய வாழ்வாதாரம் தேடி வந்தவர்களாய் பிற மாநில தொழிலாளர்களை நாம் பார்க்கிறோம். ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பான்மையான உள்கட்டமைப்புக்கு பின்னிருக்கும் இவர்களது உழைப்பு அளப்பரியது. நன்றியோடு துணை நிற்போம்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தலைவர்கள் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவிக்க தடை