இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் சமூகநீதிக்கு குந்தகம் ஏற்படுத்த முடியாது என்பதால் வேறு வழிகளைக் கையாண்டு சமூக நீதியைச் சிதைக்கிறார்கள். அதில் முக்கியமானது ‘நீட்’ தேர்வு. அந்தத் தேர்வின் மூலமாக பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவுக்கு சாவு மணி அடித்துவிட்டார்கள்.
அண்மையில் வெளிவந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, மருத்துவக் கல்வியில் சேர்ந்திருக்க வேண்டிய 27 விழுக்காடு (மத்திய அரசின் இட ஒதுக்கீடு) பிற்படுத்தப்பட்ட மாணவர்களில், 12 விழுக்காட்டினருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.
மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு திறக்கப்பட்டிருந்த வழியை அடைத்ததன் மூலம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இந்துக்களுக்காக உழைப்பதாகச் சொல்லிக்கொள்வது உண்மையாக இருந்தால், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி, அதனை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழங்கியிருக்க வேண்டும்.
இந்த நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள மக்களை (அவர்களின் கணக்குப்படி ‘இந்து’ மக்களை) படிக்கவிடாமல், முன்னேற விடாமல், வேலைக்கு தகுதிப்படுத்தாமல், வேலையைத் தட்டிப் பறிக்கும் மத்திய பாஜக அரசுக்கு பாடம் கற்பிப்போம்.
இடஒதுக்கீடு பறிபோகும் விவகாரத்தில் தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும், திராவிடம் என்ற பெயரையும் தாங்கி நிற்பதை நினைத்தாவது அவர்களின் கொள்கைக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.
'சமூக நீதியை அடைவதற்கான முட்பாதை விரைவில் முடிவுக்கு வர வேண்டும்' என்றார் கலைஞர். அத்தகைய முட்பாதையை மாற்றி பண்படுத்த ஜனநாயகப் போருக்குத் தயாராவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்கட்டணமா திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி