சென்னை: தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால், செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ததால் ஓய்வு தேவை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியின் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை என்பது அரசியல் பழி வாங்கும் நிகழ்வு என திமுக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்புத் தெரிவித்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
மேலும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரக்கூடாது எனவும்; செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 21ஆம் தேதி அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கக்கோரி அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. திமுகவின் கருவூலமாக செந்தில் பாலாஜி திகழ்வதால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தயங்குகிறார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக அமோக வெற்றி பெற்றிருந்தது. இதற்குக் காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜி எனக் கூறப்பட்டது. கொங்கு பகுதியில் அதிமுக வலுவான கட்சியாக இருந்தாலும் சமீப காலத்தில் பாஜகவின் வளர்ச்சி அதிகமாகவே உள்ளது. கொங்கு மண்டலத்தில் பாஜகவின் வளர்ச்சியையும், அண்ணாமலையின் வளர்ச்சியையும் அதிகப்படுத்துவதற்காக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையின் வலையில் சிக்கவைத்ததாக கூறப்படுகிறது. மேலும், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலும் செந்தில் பாலாஜி அதிமுக-பாஜக கூட்டணிக்கு சவாலாக இருப்பார் எனக் கருதி, கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாநிலத்தில் இருக்கக்கூடிய லஞ்ச ஒழிப்புத்துறையை பயன்படுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள வழக்கை வேகப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அப்போது உள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் 10க்கும் மேற்பட்ட அதிமுக அமைச்சர்கள் ஊழல் செய்திருப்பதாக ஒரு பட்டியலை கொடுத்தார். பின்னர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.
இதனையடுத்து திமுக ஆட்சி பொறுப்பேற்றபிறகு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, காமராஜ், சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்குச் சொந்தமான வீடு மற்றும் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்திலும், உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகன் மீது தருமபுரி மாவட்ட நீதிமன்றத்திலும் கடந்த மே 22ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மீதமுள்ள முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கிலும் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான காரணம் என்ன? என்று திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவரிடம் விசாரித்த போது, “வருகின்ற நாடாமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக தேசிய அளவில் ஒருங்கிணைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார். இதனுடைய வேகத்தை குறைக்கின்ற விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறையை பாஜக ஏவிவிட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செயல்பட்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் கரூரில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை செந்தில் பாலாஜி தோற்கடித்தார். இதை மனதில் வைத்துக்கொண்டு செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய ஆவணங்களை அண்ணாமலையிடம் கொடுத்துள்ளார். அந்த ஆவணங்களை அண்ணாமலை வருமான வரித்துறைக்கு அனுப்பியதால்தான் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், அடுத்ததாக எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.சி.வீரமணி, காமராஜ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் வழக்கையும், அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆவினில் 100 டன் இனிப்பு காணாமல் போன விவகாரத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகப்படுத்த இருக்கிறார். மேலும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகப்படுத்த உள்ளார். இதனால், பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே உள்ள கூட்டணியில் சலசலப்பு ஏற்படும். இதனால், திமுகவின் மீது வைக்கப்படும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறையும்” எனக் கூறினார்.
இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார், ''அதிமுக முன்னாள் அமைச்சர் மீது ஊழல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை முதலமைச்சர் ஸ்டாலின் வேகப்படுத்தலாம்.
இது பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூற முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையினரின் நடவடிக்கையை திசை திருப்ப அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருக்கலாம். இது, அதிமுக-பாஜக கூட்டணி இடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றுதான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் சர்ச்சைகளுக்கு உள்ளாகும் திமுக அமைச்சர்கள்!