திமுக பொதுக்குழு கூட்டம், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்றது. எப்போதும் பிரமாண்டமாக நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம், இம்முறை கரோனா பரவல் காரணமாக காணொலி வாயிலாக நடைபெற்றது.
பொதுவாக திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்கள் உட்பட 4,000 நபர்களுக்கு மேல் பங்கேற்பார்கள். ஆனால், இம்முறை சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு இல்லாததால், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மொத்தம் 3,774 நபர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர். பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் திமுகவின் இந்த பொதுக்குழு புதியதொரு சாதனையைப் படைத்துள்ளது.
அதாவது அதிக நபர்கள் பங்கேற்ற ஆன்லைன் கூட்டம் என்று உலக அளவில் திமுக பொதுக்குழு இரண்டாவது இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் வேட்பாளராக ஜோ பிடனை அறிவிக்க நடத்தப்பட்ட மாநாடு முதல் இடத்தில் உள்ளது. அதேபோல ட்ரம்பின் குடியரசு கட்சி சார்பில் நடத்தப்பட்ட மாநாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
கரோனா காலத்தில் நேரில் கூட்டம் நடத்த முடியாமல் ஆன்லைன் மூலம் பல கூட்டங்களை தொடர்ச்சியாக திமுக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது - முதலமைச்சர் ட்வீட்