திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று(ஜூலை 16) காலை காணொலி கட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மின் கட்டணம் உயர்வு குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 21ஆம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்புவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது கரோனா நோய்த் தொற்று தீவிரமாகப் பரவிவருவதைத் தடுக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிடவும், தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியிடம் தாரை வார்த்திடக்கூடாது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கு மருத்துவக் கல்வியில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட்”தேர்வை ரத்து செய்து பன்னிரெண்டாம் வகுப்பு’ மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்திட வேண்டும், மாணவர்களின் இறுதி மற்றும் அனைத்து செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. மீதான பொய் வழக்கிற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.