ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணனூர், ஸ்ரீசக்தி நகரில் கழிவுநீர் ஏற்றும் நிலையம் உள்ளது. இங்கு மாநகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகளில் இருந்து அகற்றப்படும் கழிவுநீரை ஒப்பந்த லாரிகள் மூலம் கொண்டு வந்து விடுகின்றனர். இவ்வாறு தினமும் 12 லாரிகளில் 180 தடவை விடப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல், அம்பத்தூர் மண்டலம், பூந்தமல்லி நகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஒப்பந்த லாரிகள் மூலம் திருட்டுத்தனமாக இங்கு கழிவுகளை விடுகின்றனர்.
இந்த லாரிகள் அனைத்தும் அண்ணனூர் 60அடி சாலை, திருக்குறள் மெயின்ரோடு வழியாக அடிக்கடி அதிவேகமாக வருகின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், அந்த வழியில் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இதோடு மட்டுமல்லாமல், லாரிகளில் கொண்டு வரும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் சமீபகாலமாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொது நலச்சங்கங்கள் ஆவடி மாநகராட்சி அலுவலர்களுக்கு புகார்கள் அனுப்பின. இருந்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தனர். இதனையடுத்து, ஆவடி மாநகர திமுக சார்பில் சுத்திகரிப்பு நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் சுதாகர், வட்ட செயலாளர் பெருமாள் உள்பட கட்சி தொண்டர்கள், பொது நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது, அங்கு வந்த கழிவு நீர் லாரிகளை போராட்டக்காரர்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த காவலர்கள், ஆவடி காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் போராட்டம் நடத்திய திமுகவினர் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அண்ணனூர் கழிவு நீரேற்றும் நிலையத்தில், அப்பகுதியில் இருந்து அகற்றப்படும் கழிவு நீரை கொண்டு வரும் ஒப்பந்த லாரிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மற்ற பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் ஒப்பந்த லாரிகள் வர கூடாது என உறுதி அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என அம்மக்கள் திட்டவட்டமாக கூறினர்.
இதனையடுத்து, மாநகராட்சி அலுவலர்கள் மேற்கண்ட சுத்திகரிப்பு நிலையத்தில் இப்பகுதியில் கழிவுநீர் அகற்றும் 3 லாரிகளை மட்டுமே அனுமதிப்போம் என உறுதி அளித்தனர். அதன்பிறகு திமுகவினரோடு மக்கள் கூட்டம் கலைந்து சென்றது.