சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை எதிர்த்தும் தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 20) ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழகம் முழுவதும், இன்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற தமிழக ஆளுநரைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை தி.மு.கவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் துவக்கி வைத்தார்.
இதையும் படிங்க: அதிமுக எழுச்சி மாநாடு - எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு!
மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி நடைபெற்று வரும் இந்த ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின், தி.மு.க தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஆயிரக்கணக்கான தி.மு.கவினர் இன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் திமுகவினர் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் முகமூடிகளை அணிந்து கொண்டு போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், இன்று திருமணமான புதுமண தம்பதிகள் தங்களுடைய பங்களிப்பை அளிக்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு (BAN NEET) என்ற வாசகம் பொருந்திய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு அவர்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். புதுமண தம்பதிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
மதுரையில் அதிமுகவின் மாநாடு நடைபெற்று வருவதால் அம்மாவட்டத்தை தவிர்த்து அனைத்து மாவட்டங்களில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரையில் வரும் 23ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது. மேலும், சென்னையில் நடைபெற்று அரும் போராட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.பி.தயாநிதிமாறன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மான் வேட்டையாடிய 2 நபர் கைது... வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை!