நீட் தேர்வு தொடர்பாக திமுக கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுதும் திறனை பெறும் வரை நீட் தேர்விலிருந்து விலக்கு பெற
வலியுறுத்துவோம் எனக் கூறியுள்ளது. இது நீட்டிலிருந்து நிரந்தர விலக்கு பெறுவதற்காக தமிழக சட்டமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு எதிரான நிலையாகும்.
நீட் தேர்விலிருந்து தற்காலிக விலக்கு கோருவது மத்திய பாஜக அரசுக்கு அடிபணியும் சந்தர்ப்பவாத நிலையாகும். இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், சென்னையில் நேற்று பத்திரிகையாளர்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என உறுதிபடக் கூறியுள்ளார்.
இது தமிழக மாணவர்களின் நலன்களுக்கும், மாநில உரிமைக்கும் எதிரானதாகும். அதிமுக, பாமக போன்ற கட்சிகள் நீட் நுழைவுத்தேர்வு தொடர்பாக மத்திய அமைச்சரின் கருத்தை ஏற்கின்றனவா என மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். நீட் நுழைவுத் தேர்வு பிரச்னை, அதிமுக கூட்டணியின் சந்தர்ப்பவாத நிலையை உறுதி செய்கிறது. தமிழக மாணவர்களுக்கு எதிராக செயல்படும் அதிமுக கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். நீட் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண, மருத்துவக்கல்வியில் தமிழக உரிமையை காத்திட, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.