திமுக., பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், மார்ச் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைந்தார். கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக, திமுக., வின் பொதுச் செயலாளராக இருந்த அவரது மறைவையடுத்து, கட்சியின் முக்கியப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்தது யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துவந்தநிலையில், மார்ச் 29ஆம் தேதி திமுக.,வின் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்," திமுக பொதுக்குழு கூட்டம், வரும் மார்ச் 29ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்" என, மு.க.ஸ்டாலின் அந்த அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், கட்சியின் முத்த தலைவர்களுக்கே அதிக வாய்ப்புகள் என்று கூறப்படுகிறது. திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக துணை பொதுச்செயலாளர் அன்பழகன், திமுக முதன்மைச் செயலாளர் டி .ஆர்.பாலு உள்ளிட்டவர்களில் ஒருவருக்கு வாய்ப்புகள் அதிகம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டால், அவர் வகித்துவரும் திமுக பொருளாளர் பதவிக்கு வேறு ஒருவரைத் தேர்வு செய்யவேண்டும். திமுக பொருளாளர் பதவிக்கு, திமுக முதன்மைச் செயலாளராக கே.என். நேருவுக்கு வழங்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ள நிலையில், திமுக பொதுச்செயலாளராக யார் தேர்வு செய்யப்பட்டால், சிறப்பாக செயல்படுவார்கள் என்று திமுக தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ‘பேராசிரியருக்கு நானும் மகன்தான்’ - படத்திறப்பு விழாவில் ஸ்டாலின் உருக்கம்