சென்னை: சட்டப்பேரவையில் நேற்று (மே.5) 2022-23ஆம் ஆண்டிற்கான போக்குவரத்து துறை மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் கலை, பண்பாடுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதற்கு, துறை அமைச்சர்கள் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். இதில், போக்குவரத்துத் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அதற்கான பதில் உரையை துறையின் எஸ்.எஸ்.அமைச்சர் சிவசங்கர் அளித்தார்
அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர், "இந்த அவையிலே உரையாற்றிய எங்களுடைய இயக்கத்தின் மாநில இளைஞரணிச் செயலாளர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர், முதலமைச்சருடைய மகன், நாளைய தினம் அவர் இந்த அவைக்கு அமைச்சராக வர வேண்டும் என்று நாங்களெல்லாம் எதிர்பார்க்கக்கூடியவர்" என பேசினார்.
முன்னதாக, இன்று மிகச் சிறந்த சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி செய்யும் பணியை மக்கள் பார்ப்பதுபோல், அவர் அமைச்சரானால், மிகச் சிறப்பாக செயல்படுவார். எனவே, உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சராக வர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என ஆவலுடன் காத்திருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்சிவசங்கர் தெரிவித்தார்.
இதனிடையே, மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன், " ஒரு கல் ஒரு கண்ணாடி வரும் போது சாதாரணமாக நினைத்தார்கள். ஆனால், இன்று ஒரு கல் செங்கல் வைத்து மத்திய அரசை எதிர்த்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அவரின் உழைப்பு ஒரு தொகுதியுடன் நின்று விட கூடாது, காலம் கனிந்து விட்டது. அவர் உழைப்பால் தமிழ்நாடு முழுவதும் பயன் பெற வேண்டும். அதற்கு முதலமைச்சர் மனம் கனிய வேண்டும்" என பேசினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்றுக் கடந்த ஆண்டு மே 7 ஆம் தேதி திமுக அரசு பதவியேற்றது.
முதலமைச்சராக ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை பொறுப்பேற்று நாளையுடன் (மே.7) அன்று ஓராண்டு நிறைவடைகிறது. திமுக அமைச்சரவையின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான டிஆர்.பி.ராஜா மற்றும் திருவிக நகர் சட்டப்பேரவை உறுப்பினர் சிவக்குமார் என்கிற தாயகம் கவி ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என்று சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக உள்ளார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சட்டப்பேரவையில், அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் பேச்சியது மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும் இரண்டு துறைகளை வைத்திருக்கும் அமைச்சர்களிடம் இருந்து துறை பிரிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு முடி சூட்டு விழா நடைபெற வாய்ப்புள்ளது எனவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.