தமிழ்நாட்டில், சட்டப்பேரவைத் தேர்தல் ஆற்ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கலும், பரிசீலனையும் முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வேட்புமனுவை நாளை மாலை 5 மணி வரையில் திரும்பப் பெறலாம். இந்நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் தொகுதியில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாக்களர்களுக்கு பணம் அளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சில அலுவலர்கள் தங்களின் வாகனங்களில் பணத்தை எடுத்துச் செல்ல உதவியாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களில் சிலர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுவதாக தெரியவந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இது குறித்து ஏற்கனவே பேசியுள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 123(7) ன்படி அரசுப் பணியில் உள்ள எந்த ஊழியரும் தேர்தல் பணியில் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படக்கூடாது. தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்தின் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், சில அலுவலர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கிடைக்கப் பெற்ற ஆதாரத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கும். தேர்தல் விதிகளை மீறி செயல்படும் அலுவலர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தல் முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும். இதனால், அவர்களின் வேலைப் பறிபோவதுடன், குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டணையும் பெற்றுத் தரப்படும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஒருதலை காதலால்..எட்டு மாத குழந்தை வெட்டிக் கொலை!