சென்னை: நீட்தேர்வு நடைமுறைக்கு வந்தபின்னர் அரசு பள்ளி மாணவர்கள் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தாலும் அவர்களால் தனியார் பயிற்சி நிலையங்கள், தனியார் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுடன் போட்டி போட முடியாத சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது.
இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இளநிலை மருத்துவ படிப்பில் நீட் தேர்வில் தகுதி பெற்ற பின்னர் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் செப்டம்பர் 15ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 45 நாட்களுக்குப் பின்னர் அச்சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்காக இயற்றப்பட்ட 7.5விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக சட்டத் திட்டக் குழுவின் தலைவருமான வில்சனிடம் நமது ஈடிவி பாரத் செய்தியாளர் ரவிச்சந்திரன் கலந்துரையாடினர். அந்த உரையாடலின் சுறுக்கப்பட்ட வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளித்து உள்ளார். இதில் ஏதாவது பிரச்சினை உள்ளதா?
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தான் கூற முடியும். ஏனென்றால் இது வெர்டிகல் ரிசர்வேஷன் கிடையாது. முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அரசு பள்ளி, தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றுதான் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவருக்கு தனிப்பட்ட முறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறப்படவில்லை.
சட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அரசு ஆணையின் நிலை என்ன?
இன்றைய தேதியில் பார்த்தால் அரசாணை போட்ட பின்னர் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால். எனவே சட்டம் தான் செல்லுபடியாகும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவரும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவரும் ஒரே மதிப்பெண் எடுத்தால் அரசு பள்ளியில் படித்த மாணவருக்கு முன்னுரிமை மட்டுமே அளிக்க முடியும் தவிர தனிப்பட்ட முறையில் அரசு பள்ளி மாணவருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியாக தரவரிசை பட்டியல் வெளியிட முடியுமா?
அரசு பள்ளியில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பார்த்த பின்னர்தான் முன்னுரிமை வழங்க முடியும். அவ்வாறு செய்யாமல் ஆரம்பத்திலேயே முன்னுரிமை வழங்க முடியாது.
அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் ஓபிசி பிரிவினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை மாநில அரசு வலியுறுத்தாமல் விட்டுவிட்டனர். திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். 2020ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி திமுக உச்ச நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்றம், நீங்கள் உயர்நீதிமன்றம் செல்லுங்கள் என அறிவுரை வழங்கியது. அன்றைய தினமே சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு குழு அமைக்க உத்தரவிட்டனர்.
அந்தக் குழுவில் மத்திய அரசின் டைரக்டர் ஜெனரல் ஹெல்த் சர்வீஸ், மாநில அரசின் சுகாதாரத்துறை செயலாளர், செகரட்டரி மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா, செகரட்டரி டென்டல் கவுன்ஸில் ஆப் இந்தியா ஆகிய 4 பேர் இருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள இட ஒதுக்கீடு சட்டம் 1993 அடிப்படையாகக்கொண்டு 3 மாதத்திற்குக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனால், ஜூலை 27ஆம் தேதி போடப்பட்ட உத்தரவிற்கு செப்டம்பர் ஏழாம் தேதி தான் குழு அமைத்தனர். அந்தக் குழுவில் மத்திய அரசின் டைரக்டர் ஜெனரல் இடம் பெற வேண்டும். அதேபோல் மாநில சுகாதாரத்துறை செயலாளர் இடம் பெறவேண்டும். ஆனால் அவர்கள் இடம்பெறாமல் அவர்களுக்கு மாற்றாக ஒருவரை அனுப்பி இருந்தனர். இதனால் அந்தக் குழு வலுவிழக்கும் நிலை ஏற்பட்டது.
அதேபோல், தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்து உச்ச நீதிமன்றம் சென்று இந்த ஆண்டு ஒபிசிக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். தமிழ்நாடு அரசு குழு இட ஒதுக்கீட்டை பெறுவதில் கவனம் செலுத்தவில்லை. மத்திய அரசு இந்த ஆண்டே ஓபிசி பிரிவினருக்கு தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீடு வேண்டும் என கேட்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதுவும் ஓபிசி பிரிவினருக்கு இந்தாண்டு இட ஒதுக்கீடு கிடைக்காததற்கு காரணமாகும்.
7.5 சதவீத இட ஒதுக்கீடு வருவதற்கு அதிமுக தான் காரணம் என கூறுவது குறித்து கருத்து என்ன?
இரண்டு கைகளைத் தட்டினால்தான் ஓசை வரும். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக எந்த அளவிற்கு இறங்கி போராடினார் என்பது தெரியும். சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யும்போது திமுக எதிர்ப்பு தெரிவிக்காமல் அதனை உடனடியாக நிறைவேற்றினார்கள்.
ஆளுநருக்கு அனுப்பிய பின்னர் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்பது தெரிந்தவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். யாருக்கும் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்காத ஆளுநர் எதிர்க் கட்சி தலைவருக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். மேலும், ஒப்புதல் அளிப்பதற்கு மூன்று முதல் நான்கு வாரங்கள் தேவைப்படும் எனவும் இதுகுறித்து அவரை சந்தித்த அமைச்சர்களிடம் தெரிவித்ததாகவும் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
அதேபோல் திமுக தலைவர் ஆளுநர் மாளிகை முன்னர் போராட்டம் நடத்தியதுடன் ,திமுக எம்பிக்கள் உள்துறை அமைச்சருக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் வழங்க அறிவுறுத்த வேண்டும் என கூறி கடிதம் எழுதினோம். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கூறிய கருத்துகளும் செய்தித்தாள்களில் வெளிவந்தன. எனவே, அரசு தங்களால் தான் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்தது எனக் கூறினால் அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய ஒதுக்கீடு என்பது 36 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட திட்டம். அப்பொழுது, உச்ச நீதிமன்றம் சில மாநிலங்களில் மருத்துவ கல்லூரிகள் இல்லாமல் இருந்ததால் இந்த நடைமுறையை கொண்டு வந்தது.
அந்த மாநிலங்களில் உள்ள மாணவர்கள் பிற மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை இருந்ததால் அப்போது கொண்டு வந்தனர். தற்போது எல்லா மாநிலங்களிலும் மருத்துவக்கல்லூரி வந்துவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்வி தரமாகவும் இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கே மருத்துவ படிப்பில் அதிக அளவில் இடம் தேவைப்படும்போது இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.
அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டால் அந்த இடங்கள் தமிழ்நாடு மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கு ஏற்கனவே நீதிபதி தலைமையில் கல்வி கட்டணக் நிர்ணயக்குழு செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக உதவும் வகையில் இது குறித்து பரிசீலனை செய்து திமுக தலைவர் முடிவெடுப்பார்.
சட்ட மசோதாவால் எந்தப் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது?
இந்த சட்ட மசோதா அனைத்து பிரிவினருக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் என கூற முடியாது அதே போல் 69 சதவீத இட ஒதிக்கீடு உள்ளவர்களுக்கு மட்டும் எனவும் கூற முடியாது 31 சதவீதம் உள்ள பொதுப்பிரிவினருக்கு இதில் முன்னுரிமை பொருந்தும். மாணவர்கள் எந்த ஒதுக்கீட்டில் வருகிறார்களோ அதில் தனியார் பள்ளி மாணவர் பெற்றுள்ள மதிப்பெண் உடன் அரசு பள்ளி மாணவர் பெற்றுள்ள மதிப்பெண் ஒப்பிடப்படும். அதில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த சட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு உடனடியாக இடம் கிடைக்கும் என யாராவது நம்பி இருந்தால் அது அவ்வாறு இருக்காது. கலந்தாய்வு முடிந்த பின்னர்தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் கிடைத்தது என்பது தெரியவரும் ஆனால் அதே நேரத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்கள் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே முன்னுரிமை கிடைக்கும் தனியாக எவ்வித இட ஒதுக்கீடு கிடையாது என தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: ”நான் இஸ்லாமியரோ, சீக்கியரோ அல்ல, இந்து... இந்து மதம் குறித்துதான் என்னால் பேச முடியும்” - திருமாவளவனுடன் சிறப்பு நேர்காணல்