திருநெல்வேலி: நெல்லை திருமண்டல திருச்சபையின் நிர்வாக பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிப்பதில் பேராயர் தரப்பிற்கும் லே செயலாளர் தரப்பிற்கும் இடையே பல நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. திருச்சபையின் கீழ் ஏராளமான கல்லூரி பள்ளி உள்பட கல்வி நிறுவனங்கள் உள்ளன. அந்த கல்வி நிறுவனங்களுக்கும் தாளாளர் உள்பட பல பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்தி ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் திருநெல்வேலி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திருச்சபையின் கீழ் இயங்கும் பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியின் தாளாளராக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் எம்பி ஞானதிரவியத்தை நெல்லை திருமண்டல உயர் கல்வி நிலை குழு செயலாளர் பொறுப்பில் இருந்தும் நெல்லை ஜான்ஸ் பள்ளி தாளாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கி கடந்த வெள்ளிக்கிழமை பேராயர் பர்னபாஸ் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து புதிய நிர்வாகியாக அரசு வழக்கறிஞர் அருள்மாணிக்கம் என்பவர் நியமிக்கப்பட்டு பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி தாளாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜான்ஸ் பள்ளி வளாகத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்த பிரச்சனை கைகலப்பு வரை சென்றது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை பேராயர் தரப்பு ஆதரவாளராக இருக்கும் தென்னிந்திய திருச்சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊழிய ஸ்தானத்தின் பேராயர் காட் பிரே நோபல் என்பவர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தென்னிந்திய திருச்சபை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது லே செயலாளர் தரப்பு ஆதரவாளர்கள் அவரை தடுத்து நிறுத்தி சபைக்கு சம்பந்தம் இல்லாதவர் வருவதை அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர் 1971 இல் இருந்து நான் தூய திருத்துவ பேராலயத்தின் பங்கு உறுப்பினர் என தெரிவித்து அலுவலகத்திற்குள் செல்ல முயற்சித்தார். அதற்கு இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே கூட்டத்துக்குள் இருந்து வந்த நபர் ஒருவர் பேராயர் காட் பிரே நோபில் முகத்துக்கு நேராக சென்று அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத காட் பிரே நோபில் நிலை தடுமாறினார். தொடர்ந்து அந்த நபர் மற்றும் சிலர் நோபிலை காலால் உதைத்தும் கையால் தாக்கியும் ஓட ஓட விரட்டினர். அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு வெளியே அவரை அடித்து தள்ளினர். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த நிலையில் பேராயர் காட் பிரே நோபல் நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். மேலும் அவருக்கு பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே திருச்சபையில் தொடர்ச்சியாக மோதல் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில் இன்று எம்பி ஆதரவாளர்கள் பேராயரை சரமாரியாக அடித்து ஓட ஓட விரட்டி அடித்து விரட்டிய சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தின் லே செயலாளர் ஜெய்சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நிர்வாக ரீதியிலான நியமனங்கள் மற்றும் பிரச்சனைகளில் பேராயர் தலையிடுவதற்கு எந்த விதமான உரிமையும் அதிகாரமும் கிடையாது. நல்ல நிர்வாகத்தை கெடுக்கும் நோக்கில் பேராயர் செயல்பட்டு வருகிறார். கொள்ளையடிக்கும் நபர்களுக்கு புதிய நிர்வாகிகளாக பதவியும் வழங்கி வருகிறார்.
ஊழியம் செய்வதற்கு மட்டுமே பேராயருக்கு அதிகாரம் உள்ளது. இன்றைய தினம் திருச்சபை அலுவலகத்தில் நடந்த பிரச்சனைக்கு சபைக்கு சம்பந்தமே இல்லாத காட்ப்ரே நோபல் தான் காரணம். தென்னிந்திய திருச்சபை அலுவலகத்தில் கழகமூட்டும் நோக்கம் கொண்டே அவர் செயல்பட்டார். குண்டர்களை அழைத்து வந்து நாடகமாடி பிரச்சினையை ஏற்படுத்தினார்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூனியம் வைக்க சொன்ன அண்ணன் மனைவி; சூனியம் அகற்றுவதாக கூறி மோசடி செய்த நபர் கைது!