சென்னை: ஹத்ராஸ் சம்பவத்திற்கு நீதிகேட்டு திமுக எம்பி கனிமொழி தலைமையில் திமுகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் பகுதியில், 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. சென்னை சின்னமலை பகுதியில் நடைபெற்ற இந்த பேரணியை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, "உ.பி.யில் பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது, பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை, பெண்கள் மீது காட்டுவதில்லை. பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது" என்று தெரிவித்தார்.
இந்த பேரணியில் ஈடுபட்ட கனிமொழி உள்பட திமுக தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ஹாத்ராஸ் சம்பவத்திற்கு நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும். இந்தியாவில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களில் நான்கில் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் தான் நடைபெறுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். ராகுல் காந்தியை கீழே தள்ளி உள்ளனர். அவரை தள்ளிவிட்டதாக இதை கருத முடியாது, ஜனநாயகத்தையே கீழே தள்ளி உள்ளனர்.
தமிழ்நாட்டில் விரைவில் திமுக ஆட்சி அமையும், அதன் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கு தனி நீதிமன்றம் அமைத்து பெண்கள் பிரச்னைகளுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க:'மகள்களை கண்ணியமாக இருக்க அறிவுறுத்தினால், பாலியல் சீண்டல்கள் நடைபெறாது'- பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து