சென்னை : இந்தியாவின் கானக் குயில், தேசத்தின் மகள் எனப் போற்றப்பட்ட லதா மங்கேஷ்கர் ஞாயிற்றுக்கிழமை (பிப்.6) காலமானார். அவருக்கு வயது 92.
இவரின் மறைவுக்கு திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.,யுமான கனிமொழி கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தன் இனிய குரலால் இந்திய மக்களைக் கவர்ந்த மரியாதைக்குரிய லதா மங்கேஷ்கர் அவர்கள், மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவர் குரலால் நம்மிடையே எப்போதும் வாழ்வார்” எனத் தெரிவித்துள்ளார்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்- அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். லதா மங்கேஷ்கர் 37 மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். இவருக்கு நாட்டின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது.
லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 2 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு, தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படுகிறது.
இதையும் படிங்க : கானக் குயில் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!