சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் வசித்து வருகிறார் எஸ்.கே.கண்ணன். இவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை , சைதாப்பேட்டை தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளார். இதனையடுத்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சி.பி.சி.ஐ. டி காவல்துறையினர் மா.சுப்ரமணியன் மீது போலி ஆவணம் தயாரித்தல் ,ஏமாற்றுதல், கூட்டுச்சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடத்த 2ஆம் தேதி சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, மா.சுப்ரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் இன்று நேரில் ஆஜராகிக் குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக்கொண்டனர். மேலும், குற்றச்சாட்டுப் பதிவுக்காக வழக்கு விசாரணை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ' கோத்தபய ராஜபக்ச ரத்த வெறி பிடித்த மிகக்கொடியவன்' - வைகா கடும்தாக்கு