இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று சென்னையின் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட நிவர் புயல் பாதிப்பை பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வர இருப்பதாக ஊடகங்களின் வாயிலாக செய்தி பரவியது.
தாம்பரத்தில் ஒரே நாளில் பெய்த 30 செ.மீக்கும் மேலான மழையாலும், ஏரிகளில் நிறைந்த உபரி நீராலும், பாதிக்கப்பட்டு பரிதவித்துக்கொண்டிருந்த செம்மஞ்சேரி, சுனாமிநகர், பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம், ஜவஹர் நகர் போன்ற பகுதிகளைச் சார்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தம்முடைய குறைகளை கேட்கவே முதலமைச்சர் வருகிறார் என்று ஆவலோடு காத்திருந்து ஏமாந்துள்ளனர்.
அவர், துரைப்பாக்கம் ஒக்கியம்மடுகு, முட்டுக்காடு முகத்துவாரம் போன்ற ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு சென்றுள்ளார். ஆனால் மு.க.ஸ்டாலினைப் பார்த்து ‘வெளியே வந்து பாருங்கள்’ என்று கூறியிருக்கிறார்.
ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிற நேரங்களிலெல்லாம், மக்கள் வாழும் பகுதிக்கு விரைந்துச் சென்று உதவிக்கரம் நீட்டி, துயர் துடைக்கும் மக்கள் தலைவராக இருப்பதை அனைவரும் அறிவர். தம்முடைய தேவைகளை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என எண்ணியிருந்த மக்களை அலட்சியப் படுத்திவிட்டு, சேற்றுப்பகுதியில் சிவப்பு கம்பளம் விரித்து அதன்மேல் நடந்துசென்று, ஆற்றுநீரைப் பார்த்துவிட்டுவந்த ஹை-பை முதலமைச்சர் இந்தியாவிலேயே இவரைத்தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
கரோனா தொற்று முடியும் வரை தனது வீட்டிற்கு பொதுமக்களோ, அலுவலர்களோ வரவேண்டாம் என அமைச்சர்களும், சேலத்திலேயே தங்கியிருந்த முதலமைச்சரையும் மக்கள் மறக்கமாட்டார்கள்
ஏப்ரல் 20ஆம் தேதி ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம் ஒரு கோடிக்கும் மேலானவர்களுக்கு திமுக சார்பில் உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் வழங்கப்பட்டது. நிவர் புயலின்போதும் மக்களின் நிலை அறிந்து செயல்பட்டது திமுக. இவற்றையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு பேசுவது முதலமைச்சர் பொறுப்பு வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழகல்ல.
சென்னை மாநகராட்சி உருவான காலத்திலிருந்து, சென்னை மேயராக ஸ்டாலின் பொறுப்பேற்ற காலம் வரையில், சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களின் அளவினை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாலே இப்பெரு வெள்ளக்காலத்திலும் சென்னை நகர மக்கள் பெருமளவு பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள் என்பதையும் முதலமைச்சர் அறிய வாய்ப்பில்லை.
எனவே கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிவதை இனியாவது பழனிச்சாமி நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.