செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றியக்குழு தலைவரான இவர் திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்எல்ஏ இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தின் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்திற்குச் செல்ல அருகில் உள்ள கோயில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எம்எல்ஏ தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த நிலத்தை பார்வையிடுவதற்காக இமயம்குமார் சென்னையைச் சேர்ந்த ரவுடிகளுடன் செங்காடு சங்கோதி அம்மன் கோயில் அருகே சென்றார். அங்கு எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதிக்கும் இமயம்குமார் தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது இமயம்குமாருடன் வந்த ரவுடி கும்பல், திடீரென எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதி மற்றும் அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர்.
பதிலுக்கு லட்சுமிபதி தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம்குமாரின் காரை நோக்கி சுட்டார். இதையடுத்து அரிவாளால் வெட்டப்பட்டதால் படுகாயமடைந்த லட்சுமிபதி மற்றும் குருநாதன் ஆகியோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், காயமடைந்த இமயம்குமார் தரப்பினர் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்டோர் மீது திருப்போரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இதயவர்மன் உள்ளிட்டோரின் பிணை மனுக்களை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, இதயவர்மன் உள்ளிட்ட 11 பேர் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், சம்பவம் நடந்தபோது தாங்கள் அங்கு இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். இவ்வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நடராஜன், உரிமம் காலாவதியான துப்பாக்கி கொண்டு இதயவர்மன் சுட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், இதய வர்மன் சொந்தமான இடத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எம்எல்ஏ இதயவர்மன் துப்பாக்கி தோட்டாக்கள் உற்பத்தி செய்தாரா? என்பது குறித்தும், அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இதேபோல் கிராம மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்களை ஏன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி, துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறையினரின் விசாரணை ஆவணங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு மருத்துவ அறிக்கைகள் என, அனைத்தையும் நாளை (ஆகஸ்ட் 6 ) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.