தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் அக்டோபர் 13ஆம் தேதி உயிரிழந்தார். இந்தத் தகவல் கிடைத்ததை அடுத்து வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, முதலமைச்சருக்கு ஆறுதல் கூற சென்னையிலிருந்து சேலம் புறப்பட்டுச் சென்றார்.
விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி பகுதியில் அமைச்சர் துரைக்கண்ணு வந்து கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதைத்தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, நேற்று (அக்.,25) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அமைச்சருக்கு தொடர்ந்து எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை விசாரிப்பு குறித்து ட்வீட் செய்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன். அமைச்சர் முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் - தீவிர சிகிச்சை