இதுகுறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித உச்சவரம்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும், அதற்கு ஏற்றவாறு அனைத்து இடங்களிலும் தேவையான எண்ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும்.
கொள்ளிடம் பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால், 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமாகியுள்ளன. எந்த ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், 1000 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்வதில்லை. தினமும் விவசாயிகள் அனுபவிக்கும் தீராத இன்னல்களை, ‘வினோத விவசாயியின்’ அதிமுக அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
ஏற்கெனவே உரிய நேரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காமல் - காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மூட்டை மூட்டையாக நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகிப்போனது. இப்போது கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டும் - வியர்வை சிந்தி விளைச்சல் செய்து விட்டு - தங்கள் நெல்லை எப்படி விற்பனை செய்யப்போகிறோம் என்ற வேதனைத் தீயில் விவசாயிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளும் - விவசாயமும்தான் தமிழ்நாட்டை தாங்கி நிற்கும் முக்கியத்தூண்கள் என்பதை இப்போதாவது உணர்ந்து, ஏற்கெனவே அறிவித்துள்ள விலையை மறுபரிசீலனை செய்து, நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3000 ரூபாய் கிடைக்கும் அளவிற்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திட வேண்டும். நெல் விலையில் எந்தவிதக் கழிவும் செய்திட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...'உனக்கெல்லாம் எதுக்கு ரோலிங் சேர்' - சாதி ரீதியாக பாகுபாடு;பட்டியலின ஊராட்சி தலைவர் தர்ணா!