சென்னை, டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் குமார் (48). தண்ணீர் கேன் விநியோகிக்கும் தொழில் செய்துவரும் இவர், திமுகவில் அண்ணா நகர் வடக்கு பகுதி (102 ஆவது பகுதி)அவைத்தலைவராக இருந்துள்ளார்.
திமுக பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை
இவர் நேற்று (ஆக.18) அண்ணா நகர், போகன் வில்லா பூங்கா வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக ஆட்டோவில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் ஏழு பேர், சம்பத் குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இதனையடுத்து இக்கொலை குறித்து அருகிலிருந்தவர்கள் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சம்பத் குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிக்கிய சிசிடிவி காட்சி
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள், அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை மையாக வைத்து விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பத் குமார் கொலை வழக்கில் தப்பியோடியவர்கள் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரி குமார் (21), ஜங்குபார் (21), மோகனவேல் (21), நவீன் குமார் (24) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
கஞ்சா விற்றுத் தரும்படி தொல்லை!
தொடர்ந்து அவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, ஹரிகுமாரின் தந்தை, சகோதரர் மீது சம்பத் குமார் பொய் வழக்கு கொடுத்து, கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு சிறைக்கு அனுப்பியதாகவும், தண்ணீர் கேன் போட சொல்லும்போது கஞ்சா பொட்டலத்தையும் உடன் விற்றுத் தருமாறு தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொடுக்கவில்லை என்றால், பொய் வழக்கு கொடுத்து சிறைக்கு அனுப்பிவிடுவேன் எனவும் சம்பத் குமார் மிரட்டியதால், அவரைக் கொலை செய்ததாகவும் மூவரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இக்கொலையில் சம்மந்தப்பட்ட ரகு உள்ளிட்ட மூன்று பேர் இன்னும் தலைமறைவாக உள்ள நிலையில், காவல் துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சி இளைஞர் கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை