கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி, உதவும் வண்ணம் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் கீழ், தொலைபேசி எண்கள் அறிமுகம் செய்து திமுக நிர்வாகிகள் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது திமுக சார்பாக ஏழைகளுக்கு உணவளிக்கும் விதமாக "ஏழைகளுக்கு உணவளிப்போம்" என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உணவுக்கே வழியில்லாத மக்கள், வாழ்விடம் இல்லாத மக்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், தினசரி வருமானம் ஈட்டுபவர்கள், வீடற்றவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதிகமான துயரத்தில் இருக்கிறார்கள். பொருள் கொடுத்தால் சமைத்துக்கொள்வோம் என்று கேட்கும் மக்கள் ஒரு பக்கம்.
பொருள் கொடுத்தாலும் சமைக்க இடமில்லை என்று சொல்லும் மக்கள் இன்னொரு பக்கம். அதனால், பசியோடு உள்ள குழந்தைக்கும், குடும்பத்திற்கும் உணவைத் தரமுடியாத நிலையில் இருக்கிறார்கள். "தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்" என்று மகாகவி பாரதி பாடியிருப்பார். தனியொரு மனிதனும் பசியால் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் 'ஏழைகளுக்கு உணவளிப்போம்' என்ற திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.
ஏழைகளுக்கு உணவளிப்போம் என்ற திட்டத்தின் மூலம், நாளொன்றுக்கு லட்சம் பேருக்கு உணவு அளிக்கிறோம். பட்டினி இல்லா சூழ்நிலையை ஓரளவுக்கு உருவாக்குவோம். இதற்காக 25 முக்கிய நகரங்களில் சமையற் கூடங்களை உருவாக்கி, உணவுகள் வழங்கப் போகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தற்கொலை செய்துகொண்ட ரயில்வே ஊழியர்!