திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னணி பேச்சாளரும், முன்னாள் அமைச்சருமான ரகுமான் கான் இன்று (ஆக. 20) காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ரகுமான் கானின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் ரகுமான் கான் மறைவிற்கு வெளியிட்ட இரங்கல் செய்திக் குறிப்பில், "திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம் காலம்தொட்டு, கழகத்திற்காக அவர் ஆற்றிய அரும்பணிகள் கண் முன்னே நிற்கிறது. கனத்த இதயத்துடன் அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் ரகுமான்கான் அவர்களின் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
மேலும், ரகுமான்கான் மறைவைத் தொடர்ந்து திமுக சார்பில் மூன்று நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் திமுக கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடவும், திமுக கட்சி நிகழ்வுகள் அனைத்தையும் மூன்று நாள்களுக்கு ரத்து செய்யும்படியும் திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது.