இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தொழுகை நடத்தும் இடத்தை அழிக்கும் நோக்கத்துடன், மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது என்று பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இதன் பிறகும் பாபர் மசூதி இடிப்பு வழக்கினை, அதிலுள்ள சதியை நிரூபிக்க முடியாமல், சிபிஐ தோற்றிருப்பது, இந்திய நாடு பாதுகாத்திட வேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

மசூதி மட்டுமல்ல, எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்தையும் ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் அநியாயமாகும். அப்பட்டமான சட்ட விரோதச் செயலாகும். குற்ற வழக்குகளில் குறிப்பாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நன்மதிப்பை சீர்குலைத்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில், நடுநிலையுடன் எச்சரிக்கையாகவும் நியாயமாகவும் செயல்பட்டிருக்க வேண்டிய சிபிஐ, அப்படி செயல்படத் தவறி, இன்று மத்திய பாஜக அரசின் கூண்டுக் கிளியாக மாறிவிட்டது வெட்கக் கேடானது.
அரசியல் சட்டத்திற்கு நெருக்கடியை உருவாக்கிய ஒரு முக்கிய வழக்கில் பொறுப்பற்ற வகையில் சிபிஐ செயல்பட்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழான தனது கடமைகளைத் துறந்திருப்பது, நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது கவலையைத் தருவதாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உடனுக்குடன்... பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு