இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா நோய்த் தொற்றால் தலைநகர் சென்னை மிகப்பெரிய பாதிப்பு அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 பேர் என்றால், அதில் சென்னையில் மட்டும் 18 ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய பெரிய மாநிலங்களில் முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, சென்னை மாவட்டத்தில் பாதிப்பு அதிகம். மேலும் கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை விட ராயபுரம் என்ற ஒரு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது மிக மிக அதிகம் என்பதையும் தமிழ்நாடு அரசு உணர்ந்ததா எனத் தெரியவில்லை.
நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை வீடுவீடாகச் செய்ய வேண்டும். அப்பகுதிகளை சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் மக்களுக்குத் தேவையான பொருள்களை அரசே வழங்க வேண்டும். அப்பகுதிக்குள் வெளிநபர்கள் யாரும் நுழைய முடியாதபடி கண்காணிக்க வேண்டும்.
சென்னையின் ஐந்து மண்டலங்களைக் காப்பதில் அரசு முழுச் சிந்தனையையும் பயன்படுத்த வேண்டும். மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் மிகக் கூடுதல் என்றும், ஆனால் மிகக் குறைவாகத்தான் கணக்கில் காட்டப்படுகிறது என்றும் தகவல்கள் வருகின்றன.
இதனிடையே, அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை ஒருநாள் அடையாளப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் மக்களைக் காப்பாற்றும் மகத்தான பணியில் இருக்கும் மருத்துவத் துறையினரையும் போராடும் நிலைமையிலேயே அரசு வைத்திருப்பது வேதனை தருவதாகும். கூட்டமைப்பினரை அழைத்து உடனடியாக அரசு பேச வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.