சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், வளர்ச்சியை கருத்தில் கொண்டும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் செயல்படுத்தப்பட்ட மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் நிறுத்தப்பட்டு, அவை ஈரடுக்குப் பாலமாக மாற்றப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை அதன் இயல்பான வடிவிலேயே தொடரவேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்ரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், " திமுக ஆட்சிக்காலத்தில் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டப்பணிக்கு மத்திய அரசின் ஒத்துழைப்புடன் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் விரைவாக நடைபெற்றன. ஆயிரத்து 815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட இந்த சாலை 19 கி.மீ. தொலைவிற்கு, கனரக வாகனங்கள் அரை மணி நேரத்திற்குள்ளாக துறைமுகத்தை அடையும் வண்ணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் காழ்ப்புணர்வு காரணமாக, பறக்கும் சாலை திட்டப்பணிகள் முடக்கப்பட்டன.
போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் பறக்கும் சாலைத் திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்பதை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடனான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பிற்கு பிறகு, ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டத்தினை ஈரடுக்கு மேம்பாலமாக மாற்ற இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பறக்கும் சாலை மேம்பாலத்திற்காக ஏற்கனவே தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஈரடுக்கு மேம்பாலம் என்பது இதன் கட்டுமானத்தை முற்றிலும் மாற்றி அமைத்து கால தாமதப்படுத்தும் அறிவிப்பாகும். அத்துடன், போகாத ஊருக்கு வழியைக் காட்ட நினைக்கிறது, டெண்டர் ஊழலுக்காகவே ஆட்சி செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசு.
ஆகவே, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தினை அதன் இயல்பான வடிவிலேயே தொடரவேண்டும். இல்லையென்றால், அதனை விரைந்து நிறைவேற்றுகிற காலம் வேகமாக வருகிறது " எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக செய்தது என்ன? - ஸ்டாலின் கேள்வி