இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனாவோடு சேர்ந்து, தானும் தன் பங்குக்கு, மக்களை 'பொருளாதார ரீதியாக' வேட்டையாடிக் காயப்படுத்த மத்திய அரசு திட்டமிடுவதன் அடையாளம்தான், வங்கிகள் நடத்தி வரும் வட்டி வசூலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வும்.
இதன் அடுத்தகட்டமாக சுங்கச் சாவடிக் கட்டணங்களை இன்று முதல் உயர்த்தி உள்ளார்கள். முன்னதாக மக்களின் வருமானம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு, அவர்களுடைய வாழ்க்கை கரோனா காரணமாகக் குலைந்து சுருண்டு விழுந்து கொண்டு இருக்கிறது. அதில் மேலும் இடியை இறக்கியதைப் போல, சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.
அடி மேல் அடித்து எவ்வளவு அடிகளை வேண்டுமானாலும் மக்கள் தாங்குவார்கள், பொறுத்துக் கொள்வார்கள் என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைப்பதே இதில் தெரிகிறது.
வேலை, வருமானம் இல்லை, ஊதியம் இல்லை, தொழிற்சாலைகள் மூடப்பட்டன, வளர்ச்சி இல்லை, சிறுசிறு தொழில்கள் மொத்தமாக முடக்கம், பெரிய நிறுவனங்களில் இருந்தே உற்பத்தி இல்லை.
இத்தகைய சூழலில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இதனோடு சேர்த்து சுங்கக் கட்டணங்களும் கூடும் என்றால் என்ன பொருள்? மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையோ அனுதாபமோ இல்லை, மக்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலையே இல்லை என்றே இதன் மூலம் தெரிகிறது.
மாநில அரசும், மக்களுக்குப் பொருளாதார உதவிகள், சலுகைகள் வழங்குவதன் மூலமாக, ஏழை, எளிய நடுத்தர மக்களின் துன்ப துயரங்களில் தோள் கொடுத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.