சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அதிமுக, திமுக, மநீம, அமமுக ஆகிய பிரதான கட்சிகள் கூட்டணி குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றன.
முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகளை விரைவில் இறுதி செய்யும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றன. ஏனெனில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதமே கால அவகாசம் உள்ளதால், அதற்குள்ளாக தொகுதி வேட்பாளர்களை மக்கள் மனதில் பதியவைப்பது அவசியம். எனவே, கூட்டணி பேச்சுவார்த்தைகள் இரு கட்சி தரப்பிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஆறாம்கட்ட தேர்தல் பரப்புரை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பின் கீழ் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இரு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 8ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின், சேலம் சீலநாயக்கன்பட்டியிலுள்ள மதன்லால் மைதானத்தில் காலை 9 மணியளவிலும், நாமக்கல் பொம்மைகுட்டைமேட்டில் மதியம் 1 மணியளவிலும், கரூர் மாவட்டத்திலுள்ள ராயனூர் பகுதியில் மாலை 5 மணியளவிலும் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதேபோல, 9 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பித்தளைப்பட்டி பிரிவில் காலை 9 மணியளவிலும், மதுரை மாவட்டம் சிஎஸ்ஐ வளாகத்தில் பகல் 12 மணியளவிலும் பரப்புரை மேற்கொள்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.