நாடு முழுவதும் 74ஆவது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடியை முதல் முறையாக திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்றியுள்ளார்.
இதற்கு முன்னர் எப்போதும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அல்லது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கொடியேற்றுவது வழக்கமாக இருந்தது. இதையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின், முதல் முறையாக அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடியை ஏற்றியிருப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலின் கொடி ஏற்றியிருப்பதால், இந்த நிகழ்வை சமூக வலைதளங்களில் திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர். 'இம்முறை அறிவாலயம், அடுத்தமுறை கோட்டை' போன்ற பல்வேறு விதமான வாசகங்களோடு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதல் முறையாக 2011இல் கொடி கம்பம் நடப்பட்டு, சுதந்திர தினம் மற்றும் குடியரசுத் தினங்களில் கொடி ஏற்றப்பட்டு வருகிறது. அப்போது முதல் மு.க. ஸ்டாலின் கொடி ஏற்றாமல் இருந்து வந்த நிலையில், இன்றைய 74ஆவது சுதந்திர தினத்தில் வழக்கத்துக்கு மாறாக தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் தனது சுதந்திர தினம் வாழ்த்துச் செய்தியில், 'சாதி, மத, இன' வேறுபாடுகளை அறவே தூக்கியெறிந்து - 'சகோதரத்துவம், சமத்துவம்' என்ற பாச உணர்வோடு அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக - அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் - நாட்டின் பன்முகத்தன்மையையும் போற்றிப் பாதுகாத்திட நாம் அனைவரும் உள்ள உறுதியுடன் சபதம் ஏற்போம் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் 74ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!