தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், "நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 6. கடைசி நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்த நிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததா இல்லையா?
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசிடமிருந்து உரிய விளக்கம் வந்த பிறகு மீண்டும் சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் காலம் போய் கொண்டுதான் இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முனைப்பு காட்டாமல் இருப்பது, சமூகநீதிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் இழைக்கும் மாபெரும் துரோகம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்
இதற்கு பதில் அளித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 27-11-2010 அன்று திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போதுதான் நீட்தேர்வு கொண்டு வரப்பட்டது. எனவே நீட் தேர்வுக்கான விதையை விதைத்தது திமுகதான், தும்பை விட்டு விட்டு இப்பொழுது வாலைப் பிடிக்கும் கதையாக திமுகவினர் பேசுகின்றனர். தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டுவர அரசு உறுதியாக இருக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
அதற்கு பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணியில் இருந்தாலும் 2013ஆம் ஆண்டே வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு வாங்கினோம். கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு அனுமதிக்கப்படவில்லை. இப்பொழுது நீங்கள்தான் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் வரை தமிழ்நாட்டில் நீட் வரவில்லை. அவர் அனுமதிக்கவில்லை, அதற்காக அவரைப் பாராட்டுகிறேன்.
இப்போது தமிழ்நாடு அரசு சார்பில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி வழக்கு தொடுத்து இருக்கிறீர்கள். இந்த வழக்கின் மூலம் நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்று விளக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். விவாதம் நீண்டுகொண்டே செல்வதாகக் கூறி சபாநாயகர் தலையிட்டு விவாதத்தை முடித்து வைத்தார்.