தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ள இத்தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதிருப்தியில் உள்ளவர்கள், கட்சியில் உரிய பதவி கிடைக்காதவர்கள் மாற்றுக் கட்சிக்குத் தாவத் தொடங்கியுள்ளனர்.
அதிருப்தியில் உள்ள அரசியல் தலைவர்களை ஒவ்வொரு கட்சியும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகளை மேற்கொள்கிறது. அதிமுக, அமமுக கட்சியிலிருந்து ஆட்களை இழுக்கப்பார்க்கிறது. திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி. துரைசாமி சமீபத்தில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் அதிரடியாக இணைந்தார். இது திமுகவுக்கு மட்டுமல்லாது மற்ற கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒருவர், திமுகவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சித்தாந்தைத் கொண்டுள்ள பாஜகவில் இணைந்தது பெரிய சறுக்கலாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க. செல்வம் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
தேசிய கட்சியான பாஜக தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்த திமுகவில் இருந்து ஆட்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் கு.க. செல்வம் பாஜகவில் இணையவுள்ள செய்தி உண்மையானால் அது திமுகவிற்கு பலத்த பின்னடைவு என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: பாஜக பக்கம் சாயும் திமுக வி.ஐ.பி தொகுதி எம்எல்ஏ!