சென்னை: திருநெல்வேலி மாவட்டம், ராசிபுரம் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு, சென்னை ஆலந்தூரிலுள்ள தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைத் தலைமை இயக்குநரிடம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,"ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட உவரி கடற்கரை கிராமத்தில் தூண்டில் வலை அமைக்கும் திட்டத்தில் பெறப்பட்ட ரூ. 63கோடியில் கடற்கரையில் இருந்து 320 மீட்டர் நீளத்தில் கடலுக்குள் கற்களைப் போட வேண்டும்.
ஆனால், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும், முதன்மைப் பொறியாளரும் இணைந்து நிதியை இரண்டாகப் பிரித்து கடற்கரையில் இருந்து 370 மீட்டர் கற்களைப் போடாமல் வெறும் 270 மீட்டர் தூரம் மட்டும் கற்களைப் போட்டு, அந்த திட்டத்தையே பாதிக்கும் வண்ணம் மோசமான நிலையை உண்டாக்கியுள்ளனர். இதனால், உவரி கடற்கரை கிராமம் அழியும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ரூ.65 கோடியில், 25 கோடி ரூபாயை கொள்ளை அடித்துவிட்டார்கள். இதுகுறித்து பலமுறை மீனவ மக்களும், நாங்களும் அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரைச் சந்தித்து புகார் மனு அளித்துள்ளேன். அவர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.
ஏற்கனவே வாக்கி டாக்கி ஊழல் குறித்த மனுவை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆளுநரிடம் அளித்திருக்கிறார். இதுபோன்ற பல ஊழல்களைச் செய்து பல கோடி ரூபாயைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். இதேபோன்று, அமைச்சர் வேலுமணி மீது எல்.இ.டி விளக்குகள் அமைத்ததில் 765 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றதாகப் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், அதன் மீதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: ’பாஜகவும் அதிமுகவும் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது'