சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த யோகா தினத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறுகையில், சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதற்கு பிரதமர் மோடிக்கு நாம் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய நாடுகள் உட்பட அனைவரும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடிவருகின்றனர்.
மேலும் அவர் கூறுகையில், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் தற்போது அதில் சில கருத்துகள்தான் முன்னிறுத்தப்படுகின்றன. இந்தியாவின் நிலையை பிரமாண்டமாக உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டதான் இந்த புதிய கல்விக் கொள்கை எனத் தெரிவித்தார்.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என மத்திய அமைச்சர் சதானந்தா கூறியது குறித்து கேட்டதற்கு, தன்னிடம் இந்த கேள்வியைக் கேட்பதற்கு முன்பு குமாரசாமி மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என கூறிவருகிறார்.
அதற்கு திமுக தலைவர் ஸ்டாலினின் கருத்து என்ன என்பதை கேளுங்கள். பாஜக தெளிவாகக் கூறிவிட்டது. மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்பதில் மத்திய அரசு மீண்டும் கூறியுள்ளது. அதேபோல் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி காங்கிரசார், திமுகவினர் அம்மாநில முதலமைச்சரிடம் பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.