சென்னை : பொங்கல் பரிசுத் தொகையாக அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, ஜனவரி 4ஆம் தேதி முதல் பரிசுத் தொகையைப் பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த டோக்கனில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அதிமுகவின் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் வரிப்பணத்தில் அரசு சார்பில் இந்தப் பொங்கல் பரிசுத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் அதிமுகவினர் சுய விளம்பரம் தேடிக்கொள்வது தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த டோக்கன்கள் ஆளும்கட்சியினர் மூலமாக வழங்கப்படுவதால் அனைத்து பயனாளிகளுக்கும் இந்தப் பரிசுத் தொகை போய் சேராது எனவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மூத்த வழக்கறிஞர் வில்சன் இன்று (டிச.30) நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் முறையிட்டார். இதையடுத்து, மனுவை பட்டியலிடும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் வில்சனுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், பின்னர் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தருவது யார் அரசா, அதிமுகவா... குழம்பும் பொதுமக்கள்