சென்னை: தலைமைச்செயலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் மூன்று திமுக வேட்பாளர்கள், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரவைச் செயலாளரான சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: நன்றி தமிழ்நாடு!...பிரதமர் மோடி நெகிழ்ச்சி ட்வீட்