தமிழ்நாட்டில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இதில் அதிமுகவின் முகமது ஜான் மறைவை அடுத்து அந்த இடத்தை காலியிடமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதே போல் அதிமுக சார்பில் எம்பியாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்கள் ஆகிவிட்டதால் எம்பி பதவியை இருவரும் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து மொத்தம் மூன்று இடங்கள் தற்போது காலியாக உள்ள நிலையில் திமுக சார்பில் தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக செப்டம்பர் 13ஆம் தேதி ஒரு காலி இடத்திற்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், இங்கு திமுக வேட்பாளராக புதுக்கோட்டையைச் சேர்ந்தவரும், வெளிநாடுவாழ் தமிழர் நல அணி இணை செயலாளருமான எம்.எம்.அப்துல்லாவை கட்சியின் தலைமை ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிவித்தது.
இந்த நிலையில் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா இன்று (ஆக.27) சட்டப்பேர்வை செயலாளர் சீனிவாசனிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் எம்.பி, திருச்சி சிவா எம்பி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு