கூகுள் பே, போன் பே மூலம் அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதைத் தடுக்கக்க்கோரி, திமுக சார்பில் அக்கட்சியின் தலைமை வழக்கறிஞர் நீலகண்டன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரத சாகுவிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து, வழக்கறிஞர் நீலகண்டன் கூறுகையில், 'தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் வாக்காளர்களின் அடையாள அட்டை நகல்கள் மற்றும் மொபைல் எண்களைப் பெற்று வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணப்பட்டுவாடா செய்வதற்கான பணியில், டிஜிட்டல் முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவுக்கு வாக்களிப்பதற்காக இதனை சட்டவிரோதமாக செய்து வருகின்றனர். அவைகளை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என திமுக சார்பில் புகார் அளித்துள்ளோம். கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கேசி கார்டன் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள், அவர்களிடமிருந்து வாக்காளர் அட்டை நகல்களைப் பெற்று, அவர்களின் மொபைல் எண்களையும் பெற்று வருகிறார்கள்.
இதையடுத்து, சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக, இதனை செய்து வருகிறார்கள். இதனை முழுமையாகக் கண்காணித்து அதனை தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம்.
கூகுள் பே, பேட்டியம் என்ற டிஜிட்டல் ஆப்கள் மூலம் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். இதனைத் தடுக்க வேண்டும்.
மேலும், செல்போன் மூலம் திமுக தலைவர் குரல் ஒலிக்க, பின்னே மீண்டும் ஒரு ஆண்குரலில் பொய்யான தேர்தல் அறிக்கை தகவலைத் திரித்துக் கூறி, ஐவிஆர்எஸ் கால்கள் வருகின்றன. இதுகுறித்து ஏற்கெனவே, தமிழ்நாடு மாநில காவல் துறைத் தலைவரிடம் நடவடிக்கை எடுக்கக்கூறினோம். ஆனால், அதே செயலை மீண்டும் மீண்டும் அதிமுகவினர் செய்து வருகின்றனர்.
இதனை சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து, உடனடியாக தடை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இணைத் தலைமைத் தேர்தல் அலுவலர் ஆனந்த்திடம் நீலகண்டன் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மார்ச்சில் இரட்டிப்பான வாகன விற்பனை: அசத்தும் மாருதி, டோயோட்டா!