80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் மாற்றுத் திறனாளிகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தபால் மூலம் வாக்களிக்க உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்களின் தொகுதி வாரியான பட்டியலை வழங்கக்கோரி திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொகுதி வாரியாக தபால் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை, மார்ச் 29ஆம் தேதி மாலை ஆறு மணிக்குள் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலர்கள், அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றிலிருந்து 31ஆம் தேதி வரை மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கே நேரடி தபால் வாக்குச்சீட்டு வழங்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதனிடையே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தபால் வாக்குப் பதிவு செய்பவர்களின் பட்டியல் இதுவரை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படவில்லை என திமுக முதன்மைச் செயலாளர் நேரு தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை நாளை (மார்ச்.26) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க:’அணுகுண்டு மேலே அமர்வதும் அணு உலை அருகில் குடியிருப்பதும் ஒன்றே’ - சீமான் பேச்சு