சென்னை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடும், சீர் மரபினருக்கு 7 விழுக்காடும் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு நேற்று (ஜூலை 26) அரசாணை வெளியிட்டது.
தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 27) தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் முதலைமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் சமூக நீதியை காக்கும் இயக்கம் திமுக என்பதை முதலைமைச்சர் மீண்டும் நிரூபித்துள்ளார். கலைஞர் ஆட்சியின்போது 108 சாதிகளை ஒருங்கிணைத்து இட ஒதுக்கீட்டை உறுதி செய்தார்.
தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் வன்னியர்களுக்கு 10.5% ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளார். இதை செய்த முதலமைச்சர், அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றி.
தேர்தலில் வன்னியர் மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய போடப்பட்ட ஒப்பந்தம்தான் அதிமுக அரசின் அறிவிப்பு. நடைமுறைப்படுத்த முடியாத அறிவிப்பாக அதிமுக அதை வெளியிட்டது.
தற்போது முதலமைச்சர் அதை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் வீடு கட்டி தரவேண்டும் என்ற கோரிக்கையையும் முதலமைச்சரிடம் வைத்தோம். அதை அவர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்" என்று கூறினார்.
இதையும் படிங்க: வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7% இடஒதுக்கீடு - அரசாணை வெளியீடு