மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகன் படத்தினை திறந்துவைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய ஸ்டாலின், “என் தந்தையை இழந்தபோது என்ன மனநிலையில் இருந்தேனோ தற்போதும் அதே மனநிலையில் தான் இருக்கிறேன். பேராசிரியர் அவர்களை பெரியப்பாவாக ஏற்றுக்கொண்டவன் நான். கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் தான் தலைவர் என என்னை வழிமொழிந்தவர் அவர். இதைவிட வேறு என்ன பெருமை எனக்கு வேண்டும்.
பேராசிரியர் தனது மகனைப்போல் ஸ்டாலினை பார்த்துக்கொண்டார் என ஊடகங்கள் சொல்லியது இல்லை. நானும் பேராசிரியர் மகன் தான். இதை பேராசிரியரே கூறியிருக்கிறார். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேராசிரியர், கலைஞர் மகனான ஸ்டாலினும் எனது மகனே என்று கூறினார். என்னை ஒவ்வொரு கட்டத்திலும் பாராட்டி, ஊக்கப்படுத்தியவர் பேராசிரியர்.
கலைஞர் அறிவாலயம் வந்த உடன் முதலில் கேட்பது பேராசிரியர் வந்துவிட்டாரா என்பதே. வரவில்லையென்றால் செல்போனில் அழைத்து வரச் சொல்லி பல்வேறு அரசியல் நிகழ்வுகளைப் பேசுவார்கள். கலைஞர் உயிரிழந்தபோது பேராசிரியர் இருக்கிறார் என்று எண்ணினோம். ஆனால், பேராசிரியர் உயிரிழந்தபோது நாம் உடைந்துபோனோம். கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் பேராசிரியரும் உயிரோடு இருந்திருப்பார். கலைஞரின் இழப்பைத் தாங்காமல்தான் பேராசிரியர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.
பேராசிரியர் விட்டுச் சென்ற பணிகளை கலைஞர் வழியில் தொடர்ந்து செயல்படுத்திட அனைவரும் பணியாற்ற வேண்டும்” என்றார். முன்னதாக பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, “திராவிட கொள்கையை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது. திராவிட இயக்கம் நிலைக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில், பேராசிரியரின் குடும்ப உறுப்பினர்கள், திமுக சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள் திருமாவளவன், வைகோ, வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'பள்ளி விடுமுறை தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பார்' - அமைச்சர் செங்கோட்டையன்