சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உருவாக்கிய இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் (IPDS) என்ற அமைப்பு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தினர்.
கடந்த 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த 1,761 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் மக்கள் பிரச்னை, ஆளுங்கட்சி செயல்பாடு, எதிர்க்கட்சிகளின் செயல்பாடு, மக்களின் எதிர்பார்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் கருத்து கேட்கப்பட்டது.
இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக இந்திய ஜனநாயக யுக்திகள் நிறுவனர் சி.திருநாவுக்கரசு சென்னையில் இன்று(பிப்.14) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
அதில், "தமிழ்நாட்டில் 20 மாத ஆட்சி எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு 40 சதவீதம் பேர் ஆதரவும், 60 சதவீதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு குறித்து கேட்கும்போது 39 சதவீதம் பேர் ஆதரவும், 51 சதவீதம் பேர் எதிர்ப்பும், 10 சதவீதம் பேர் எதுவும் சொல்வதற்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். போதைப்பழக்கத்தை தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு, 80 சதவீதம் பேர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், 11 சதவீதம் பேர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.
தற்போதுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பான ஆட்சியா? அல்லது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி சிறப்பான ஆட்சியா? என்ற கேள்விக்கு 42 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பானது என்றும், 53 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி சிறப்பானது என்றும் தெரிவித்தனர்.
இந்த கருத்துக்கணிப்பின்படி, ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கருத்துகளை சிறப்பாகப் பதிவு செய்யும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தர வரிசையில், அண்ணாமலை முதலிடத்திலும், எடப்பாடி பழனிசாமி இரண்டாவது இடத்திலும், சீமான் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.
ஈரோடு கிழக்கில் யாருக்கு உங்கள் ஓட்டு? என்ற கேள்விக்கு காங்கிரஸுக்கு வாக்களிப்போம் என்று 45 சதவீதம் பேரும், அதிமுகவிற்கு வாக்களிக்கப்போவதாக 39.52 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப் போடப்போவதாக 9.51 சதவீதம் பேரும், பிற கட்சிகளுக்கு வாக்களிப்போம் என 5.20 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் கட்சிக்கு 42 முதல் 49 சதவீதமும், அதிமுகவுக்கு 31 முதல் 36 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 6.90 முதல் 10 சதவீதமும் வாக்குகள் பதிவாகும் எனத் தெரிகிறது. ஆளுங்கட்சியான திமுக 130 கோடி முதலீடு செய்து வாக்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இடைத்தேர்தலில் மொத்தம் 76.58 முதல் 85 சதவீத வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளது" என்று கூறினார்.
தமிழ்நாடு அரசின் மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் மக்கள் அதிருப்தியில் இருப்பதாக நீங்கள் கூறினால், எப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி அடைய முடியும்? என்ற கேள்விக்குப் பதிலளித்த திருநாவுக்கரசு, 'திமுகவினர் அதிக பணத்தை செலவிடுவதால், காங்கிரஸ் வேட்பாளர் 10 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது'எனத் தெரிவித்தார்.