உள்ளாட்சி தேர்தலில், நகர் மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் திமுக அதை சந்திக்க தயாராகி வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தெடர்ந்து ஒருவர் பின் ஒருவராக அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திச் சென்றனர்.
அரசியல் தலைவர்கள் செய்தியாளர்களிடம், ‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்று கூறியுள்ளனர். இவர்கள் அதுபோல் கூறினாலும், உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடுக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தையாகவே இந்த சந்திப்புகள் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க சற்று தயக்கம் காட்டுகிறது என அரிசியல் விமர்சகர்கள் கருத்துகள் தெரிவிக்கின்றனர். மேலும் திமுக தன் பலத்தை உள்ளாட்சித் தேர்தலில் நிரூபித்தால்தான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உத்வேகம் கிடைக்கும் என்பது திமுகவின் எண்ணமாக இருக்கிறது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு விஷயத்தில் சிறிதளவும் திமுக சமரசம் செய்துகொள்ளாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இரு மாநகராட்சி கேட்பதாகவும் மீதமுள்ள கட்சிகளுக்கு மாநகராட்சி கொடுக்கப்படாது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த பின்பு எந்த கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்பது விரைவில் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கமல்ஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்!