சென்னை: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்களை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டன்று தொண்டர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ள விஜயகாந்த் கடந்த ஆண்டு கரோனா பரவல், உடல்நிலைக் கரணங்களால் தொண்டர்களைச் சந்திக்கவில்லை.
இந்நிலையில் இன்று விஜயகாந்த் தொண்டர்களைச் சந்திக்க உள்ளதாகக் கட்சித் தலைமை அறிவித்திருந்த நிலையில் காலை 7 மணி முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சித் தலைமையகத்தில் குவிந்தனர்.
இதனையடுத்து, நண்பகல் 11.30 மணிக்கு காரில் வருகைதந்த விஜயகாந்தை அங்குக் காத்திருந்த தொண்டர்கள் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்ற நிலையில் காருக்குள் இருந்த அவர் கையசைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
விஜயகாந்திடம் புத்தாண்டு வாழ்த்துப் பெற்று புகைப்படம் எடுக்க 500-க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். மேலும், சந்திப்பு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: மரகத லிங்கத்திற்கு இவ்வளவு மதிப்பா?