சென்னை ஜெ.ஜெ நகர் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜே.கே. குழுமத்தில் தீபாவளி நகைச்சீட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில், மாதம் 1,000 ரூபாய் வீதம் 12 மாதங்களுக்குக் கட்டினால் 12ஆவது மாத இறுதியில் நான்கு கிராம் தங்க நாணயம், 40 கிராம் வெள்ளி, பட்டாசு மற்றும் பரிசுப் பொருட்கள் தருவதாக தெரிவித்திருந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆந்திரா, கர்நாடகா எனப் பல பகுதிகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் நகைச்சீட்டு கட்டி வந்துள்ளனர்.
இதனையடுத்து சொன்னபடி கடந்த தீபாவளிப்பண்டிகையின் போது, தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் கொடுக்கவில்லையென்றும் மாறாக பட்டாசும் பரிசுப்பொருட்களும் மட்டுமே கொடுத்தனர் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரைத் தொடர்ந்து, இந்த மாதம் இறுதிக்குள், தங்கம், வெள்ளி தருவதாக தனியார் சீட்டு நிறுவன உரிமையாளர் ஆனந்த் பாபு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய் அன்று நகைச்சீட்டு கட்டியவர்களின் கைப்பேசிக்கு ஜே.கே. குழுமத்தில் இருந்து குறுஞ்செய்தியொன்று வந்துள்ளது. அதில், வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்திற்கு வருமாறும் அப்போது நிலுவையிலுள்ள தங்கம் மற்றும் வெள்ளி தருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழ்நிலையில் அந்த மண்டபத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்றனர். அங்கு வந்த சீட்டு நிறுவன ஊழியர்கள் நிலுவையில் உள்ள தங்கம், வெள்ளியை தருவதற்கு ஐந்து மாதம் அவகாசம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் ஊழியர்கள் இருவரையும் சிறைப்பிடித்துள்ளனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஜே.கே. குழும உரிமையாளர் ஆனந்த் பாபுவைக் கைது செய்ய வேண்டும் என்று திருமங்கலம் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனந்த் பாபுவை கைது செய்து விசாரணை செய்வதாக காவல் துறையினர் கொடுத்த உறுதியின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சைதாப்பேட்டையில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கவேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்