சென்னை: தமிழ்நாட்டில் நேற்று தீபாவளிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை பரிமாறி அன்பைப் பகிர்ந்தனர். இரண்டு ஆண்டுகால கரோனா தொற்றுக்குப்பின் தீபாவளிப்பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னையில் மாசு அளவு குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் (2022) தீபாவளிப் பண்டிகை அன்று காலை 06.00 முதல் 07.00 மணி வரையிலும், இரவு 07.00 முதல் 08.00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளிப்பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டுத் தாக்கத்தைக்கண்டறிய சுற்றுப்புற காற்றின் தர ஆய்வையும் ஒலி மாசு அளவையும் பெருநகர சென்னை மாநகரத்தின் பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சௌகார்பேட்டை, வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய ஏழு இடங்களில் மேற்கொண்டது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 14 நாட்களுக்கு (அதாவது தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும், தீபாவளி அன்றும், தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும்) காற்று மாசு காரணிகளின் அளவுகளைக் கண்காணித்து வருகிறது. மேலும் ஒலி மாசுபாட்டின் அளவு தீபாவளிக்கு முன்பு கடந்த 18ஆம் தேதி மற்றும் தீபாவளிப் பண்டிகையன்றும் மேற்கொள்ளப்பட்டது.
- தீபாவளிப் பண்டிகைக்கு முன் அதாவது 18ஆம் தேதி அன்று குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 54.84 dB(A)ம், அதிக அளவாக ஒலி மாசு வளசரவாக்கத்தில் 65.5 dB(A)ம் ஆக கண்டறியப்பட்டது.
- தீபாவளி அன்று அதாவது நேற்று 24ஆம் தேதி குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 66dB(A)ம், அதிகபட்ச அளவாக ஒலி மாசு திருவொற்றியூரில் 79.7 dB(A)ம் கண்டறியப்பட்டது.
மேற்கூறிய கண்டறியப்பட்ட ஒலி மாசு அளவுகள் தீபாவளி அன்று வரையறுக்கப்பட்ட தேசிய ஒலிமாசுபாட்டின் அளவுகளைவிட அதிக அளவாக உள்ளது எனக்கண்டறியப்பட்டது. (பகல் நேரங்களில் 65.0 dB(A), இரவு நேரங்களில் 55.0 dB(A) இருந்தது)
தீபாவளி நாளான நேற்று, காற்றுத்தர குறியீட்டு அளவு காலை 6.00 மணி முதல் மறுநாள் இன்று காலை 6.00 மணி வரை, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 345லிருந்து 786 வரை (மிக மோசமான அளவுகள்) என கண்டறியப்பட்டது.
- குறைந்த அளவாக பெசன்ட் நகரிலும் (345)
- அதிக அளவாக சௌகார்பேட்டையிலும் (786) கண்டறியப்பட்டது.
இதற்கு முக்கிய காரணிகளாக, பொதுமக்கள் பெருமளவில் பட்டாசுகளை வெடித்தும் வாண வெடிகளை பெரும் அளவுகளில் வெடித்ததினாலும், மேலும் காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரத்தன்மையும் மற்றும் காற்றின் மிகக்குறைந்த வேகமும் காரணமாக மிக மோசமாக காற்றுமாசுபாடு ஏற்பட்டுள்ளது.
மேற்கூறிய வானிலை அமைப்பு, பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் புகை வான்வெளியில் விரவுதற்கு ஏதுவான சூழ்நிலை அல்ல. இதுவே, சென்னை மாநகரத்தின் காற்றுத்தர குறியீட்டு அளவு 2022ஆம் ஆண்டின் தீபாவளி அன்று அதிகமானதற்குக் காரணம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி: அமெரிக்க வாழ் இந்தியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்