சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தியாகராய நகரில் உள்ள துணிக் கடைகள் மற்றும் பேன்சி கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. சென்னையில் அதிகமாக துணிக் கடைகள் காணப்படும் பகுதிகளான, தி. நகர் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ரோடு, பிராட்வே குடான் தெரு உள்ளிட்ட இடங்களில் புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்குவதற்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர்.
அதிலும் நடுத்தர மக்களின் பர்சேஸ்க்கு பெயர் போன தியாகராய நகரில் காணும் இடம் எல்லாம் மனிதத் தலைகளாக காட்சி அளிக்கின்றன. விதவிதமான கலக்சன்கள், புதிய ரகங்கள் என ஜவுளிக் கடைகளில் புத்தாடைகள் வந்து குவிந்ததாக கூறப்படும் நிலையில் அதை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதாலும், தற்போது தான் பல்வேறு நிறுவனங்களில் சம்பளம் மற்றும் போனஸ் தொகை வழங்க தொடங்கி உள்ளதாலும் மக்கள் உற்சாகமடைந்து உள்ளனர். அதன் எதிரொலியாக விடுமுறை நாளான நேற்றும், இன்றும் சென்னை தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இனி வரும் நாட்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவம் என்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் திவீரமாக ஈடுபட்டு உள்ளனர். திருட்டு போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக பல இடங்களில் கண்கானிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான போலீசார் சீருடையிலும், பொது மக்களோடு மக்களாக கலந்தும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக போக்குவரத்து காவலர்களும் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தீபாவளி பண்டிகையானது விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் மக்கள் துணிகள் வாங்குவதற்கு வழக்கத்தை விட முன்னதாகவே ஷாப்பிங் செய்ய தொடங்கி விட்டனர். கடந்த இரண்டு இரண்டு மூன்று ஆண்டுகளாக கரோனா காரணமாக தீபாவளி பண்டிகை களையிழந்து காணப்பட்ட நிலையில், நடப்பாண்டு ஜோராக கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
அதற்கு சான்றாக வழக்கத்தை விட இந்த வருடம் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. கடைகளிலும் துணிகள் புதுப்புது ரகங்களாக வந்து குவிந்து உள்ளதாலும், விலையும் நடுத்தரமாக உள்ளதாலும் மக்கள் கூடுதல் குஷியாக பர்சேஸ்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை ஐஐடி மாணவர்களின் அதிநவீன தொழில்நுட்ப கண்காட்சி..!