தெலுங்கானாவில் திஷா கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அவசர காலங்களில் உடனடியாக காவல்துறையினர் தொடர்பு கொள்ள காவலன் என்ற பிரத்யேக செயலியை இரண்டு வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இதுகுறித்து திருநின்றவூரில் உள்ள ஜெயா கல்லூரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அம்பத்தூர் காவல் ஆணையர் ஈஸ்வரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு செயலி குறித்தான விளக்கங்களை வழங்கினார். மேலும் செயலியை பதிவிறக்கம் செய்வது செயலின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " பொதுமக்கள் அதிகம் கூடும் தேவாலயங்கள், கோவில்கள், மார்க்கெட் போன்ற பகுதிகளில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என்றார்.
மேலும், "இது பெண்களுக்கென உருவாக்கப்பட்ட செயலி அல்ல இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய செயலி, எனவே இதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்த வேண்டும்" எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றம் குறைய ஆண்களின் மனம் மாறணும்!